
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று (செப்.13) தொடங்குகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மாநில முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்டங்கள் தோறும் சென்று கட்சி அணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில்,தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று முதல் தனது மாநிலம் தழுவிய பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் வந்தடைகிறார். இதன்பின் பிரசார சுற்றுப்பயணத்திற்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட பேருந்தில் ஏறி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் காலை 10.35 மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதன்பின், அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பிரசாரம், அங்கிருந்து பெரம்பலூர் மாவட்டம் சென்று குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவில் பிரசாரம், பெரம்பலூர் வானொலித் திடலில் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்பின் சாலை மார்க்கமாக சென்னை திரும்புவார் என தவெக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன் என்ற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.
இன்று (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே, என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், மக்களிடம் செல் என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.