
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பல மாதங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹோசஹள்ளி கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக இளைஞர்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வேகமாக வந்த லாரி ஒன்று, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் லாரி அடியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 24- பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்கள் ஹசனில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரகலகுடுவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “ஹசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹோசஹள்ளியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பயங்கர விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், இதில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது லாரி மோதி பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை மாநில அரசே ஏற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில் “ஹசன் மாவட்டத்தில் மொசலே ஹோசஹள்ளியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பயங்கரமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், இதில் பலர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பக்தர்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது மிகவும் துயரமான சம்பவம். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.