
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், தவெக தலைவரான நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி வருகிற செப்டம்பர் 13-ம் தேதி தனது முதற்கட்ட அரசியல் பிரசாரப் பயணத்தை திருச்சி சத்திரம் பகுதியில் இருந்து தொடங்குகிறார். அங்கிருந்து பிரசாரத்தை அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கு . ‘தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அஞ்சலி செலுத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் பாமகவில் இருந்தவன். ராமதாஸ், அன்புமணிக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னை தான். இருவரும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்னையைச் சரிசெய்து கொள்வார்கள். இலவசங்களை கொடுத்து மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களைத் தலை நிமிர வைப்பேன் என்று கூறுவது சாதனை அல்ல, வேதனை” என்றார்.
தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணம்குறித்துத் தொடர்ந்து பேசிய சீமான், “ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்களுக்காக மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஆனால், விஜய் அவ்வாறு மக்களைச் சந்திக்கவில்லை. இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என்றார்.