
சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் இன்று அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரனார் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு கட்சியினர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள். அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே, ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.