அன்புமணியை நீக்க டாக்டர் ராமதாஸ்க்கு அதிகாரமில்லை.- வழக்கறிஞர் பாலு பேட்டி

பாமகவில் இருந்து அன்புமணியை நீக்க டாக்டர் ராமதாஸ்க்கு அதிகாரமில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17- ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கைக்குழு சுமத்தியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.

இந்த நிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் கூறுகையில், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூறாததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இதனால் பாமக செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பாமக. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்நிலையில், அன்புமணியை பாமகவில் இருந்து நீக்க ராமதாஸ்க்கு அதிகாரமில்லை என அன்புமணி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு கூறுகையில், “அன்புமணியை நீக்க ராமதாஸ்க்கு அதிகாரமில்லை. கட்சி விதிகளின்படி அன்புமணியே பாமகவின் தலைவர். தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பாமகவின் தலைவராக தொடர்கிறார். தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை. பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். அன்புமணி தரப்பு நிர்வாகிகளையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தின்படியும் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கது அல்ல. ராமதாஸ் உத்தரவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது. பாமக தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். அன்புமணியை நீக்கியது செல்லாது. பாமக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவருக்கே அதிகாரம் உள்ளது. நிர்வாகப் பணிகளில் தலையிட நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. பாமகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் இதனை சொல்கிறேன். அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. உளவு பார்த்திருந்தால் இப்படி ஒரு சூழல் எழுந்திருக்காது.” என்றார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *