
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 118 பேர் காயமடைந்தனர்
மேற்கு ஆசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து, அந்நாட்டின் மீது 2023-ம் ஆண்டு முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதலை நடத்தினர்.
இதற்கு பதிலடியாக, ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் படையினர் நேற்று வான்வழி தாக்குதலை தாக்கியதாக அல்-மசிரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தென்மேற்கு சனாவில் உள்ள 60-வது தெருவில் உள்ள மருத்துவமனை, மத்திய வங்கி தலைமையகம் மற்றும் வடகிழக்கு ஏமனில் உள்ள அல்-ஜாவ்ஃப் மாகாணத்தில் உள்ள அரசு கட்டிடம் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அல்-மசிரா தெரிவித்துள்ளது.
குடியிருப்புகளுடன் சேர்த்து ஏமன் செய்தித்தாள்களின் அலுவலகங்களையும் போர் விமானங்கள் தாக்கியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் போது ஹூதி வான் பாதுகாப்பு படை, இஸ்ரேலிய விமானங்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனா மற்றும் அல்-ஜாவ்ஃப் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 118 பேர் காயமடைந்ததாக ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணத்தில் உள்ள பகுதிகளில் உள்ள ஹவுதி ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக கூறியது. ஹவுதி ராணுவ முகாம்கள், ராணுவ மக்கள் தொடர்பு தலைமையகம் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதியை போர் விமானங்கள் தாக்கியதாக ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.