
கத்தார் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பை ஒழிப்பேன் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டு அமைதிப்பேச்சு வார்த்தை நடத்தப்படடு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள கத்தார் நாட்டின் மீதும் இஸ்ரேல் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய விமானப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கலில் அல் ஹய்யா என்ற மூத்த தலைவரின் மகன் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது. அதே போல், கத்தார் தரப்பில், பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததால், அந்நாடு இஸ்ரேல் மீது ஆத்திரம் அடைந்தது.’இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்று கடுமையாக விமர்சித்திருந்தது. ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபிய தலைவர்கள் கத்தாருக்கு விரைந்து சென்று, தங்களது ஆதரவை வழங்கியதுடன், இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கத்தாரின் இறையாண்மை மீது தொடுக்கப்ட்ட இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,, ‘இருதரப்பு பேச்சு, துாதரக ரீதியிலான நடவடிக்கைகள் வாயிலாகவே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து, மோதல் போக்கை கடைப்பிடிப்பதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், இந்தியா நிச்சயம் அதை எதிர்க்கும்’ என, குறிப்பிட்டுள்ளார்.