
ஆந்திராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மண மூர்த்தி(50). இவரது மனைவி ஜோதி(40). இவர்களின் மகள் கீர்த்திகா( 20), ஜோதியின் தாய் சாரதாம்மாள்( 75) ஆகிய நான்கு பேரும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தனர். திடீரென ஒருவர் பின் ஒருவராக அணையின் தண்ணீருக்குள் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர்.
அப்போது அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் குதித்து ஜோதி மற்றும் அவரது மகள் கீர்த்திகா ஆகியோரை உயிருடன் மீட்டனர். லட்சுமண மூர்த்தி, சாரதாம்மாள் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் தண்ணீரில் குதித்து மீட்கப்பட்டவர்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆந்திராவை சேர்ந்த நான்கு பேர் கிருஷ்ணகிரியில் உள்ள அணையில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக அவர்கள் தற்கொலை செய்ய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வேறு பிரச்னை காரணமா எனத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.