
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவருக்கு வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை திடீரென ஜூலை 21, 2025 அன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்.9-ம் நடைபெறும் என்று தேரதல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் நேற்று நடைபெற்றது..பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கைப் பதிவு செய்தார். இதில் பாஜகவைச் சேர்ந்த தேசிய ஜனநயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷணன், இந்தியாவின் துணை ஜனாதிபதியானார்.
இந்த தேர்தலில் மொத்த வாக்குகள் 781 ஆகும். ஆனால், பதிவானவை 767. செல்லாதவை என 15 வாக்குகள் அறிவிக்கப்பட்டன. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர். இந்த தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற 377 வாக்குகள் தேவை. ஆனால், அதை விட கூடுதலாக சி.பி. ராதாகிருஷ்ணன் வாக்குகளைப் பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டின் தற்போதைய பலத்தின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மூலம் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் ஆதரவுடன், அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். இது தவிர சுயேச்சைகள் மற்றும் பிற நடுநிலை எம்.பி.க்களின் வாக்குகளைக் கணக்கிட்டால் அவருக்கு 449 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் சுதர்சன ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்ததை விட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அதே போல எதிர்பார்த்ததை விட சுதர்சன் ரெட்டி குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் செல்லாத 15 வாக்குகள் எதிர்க்கட்சிகளில் இருந்து பதிவாகியிருந்தாலும் கூட, பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெரிகிறது. இந்த வாக்குகளை தமிழகத்தில் உள்ள கட்சியில் இருந்தோ அல்லது மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே சிவசேனா அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்சி மாறி வாக்களித்த கருப்பு ஆடுகள் யார் யார் என எதிர்க்கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.