
மது குடிக்கப் பணம் தர மறுத்த தந்தையின் தலையில் செங்கலை கொண்டு தாக்கி 19 வயது வாலிபன் கொலை செய்த சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சர்பாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம்(43). இவரது மகன் உதய்(19). இவருக்கும், இவரது தந்தை கௌதமிற்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குடிப்பழக்கம் கொண்ட உதய், மது குடிப்பதற்கு அவரது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் தந்தை, மகனிடையே பிரச்னை இருந்துள்ளது.
இந்த நிலையில், கௌதமின் வீட்டிற்கு அவரது வீட்டிற்கு சகோதரர் வந்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் அவரது சகோதரர் கௌதம் இறந்து கிடந்தார். அவர் அருகில் அவரது மகன் உதய் உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கௌதமின் சகோதரர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார், கௌதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் உதயை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது மது குடிக்க பணம் தர மறுத்ததால் செங்கல்லைக் கொண்டு அடித்து அவரது தந்தையை கொலை செய்ததாக கூறினார். உதயை கைது செய்து செக்டார் 113 காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பணம் கேட்டு தர மறுத்த கௌதம், உறங்கிய பின்பு அவர் தலையில் செங்கலால் பலமுறை அடித்து உதய் கொலை செய்தது தெரிய வந்தது.
அத்துடன் கொலை செய்யப்பட்ட தனது தந்தையின் சடலம் அருகிலேயே அவர் உறங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், சம்பவத்தின் போது உதய் அணிந்திருந்த ஆடைகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.