
அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது திமுக தான். திமுகவின் தூண்டுதலில் தான் அனைத்துப் பிரச்னைகளும் இங்கு நடக்கின்றன. செங்கோட்டையனை பாஜகவினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதைத்தான் கேட்டனர் என்றார். செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.