
அதிமுகவில் கட்சிப்பதவிகளில் இருந்து கட்டம் கட்டப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், டெல்லியில் பாஜக தலைவர்களை இன்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செப்.5-ம் தேதி செய்தியாளர்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அத்துடன் 10 நாட்களுக்கு இந்த நடவடிக்கைகளை தொடங்காவிட்டால், அதற்கான நடவடிக்கைகளை நானே எடுப்பேன் என்றும் எச்சரித்தார். அவரின் இந்த பேச்சை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செப்.6-ம் தேதி எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவின் பொறுப்புகளும பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 8) கோவை விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் அவர், அங்கு பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.