
கொழும்பு அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொழும்பில் உள்ள டங்கல்லே நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். கொழும்பில் இருந்து 23வது கிலோ மீட்டர் அருகே எலா- வெல்லவயா சாலையில் நேற்று இரவு வந்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், அவசர மீட்புக்குழுவினரும், போலீஸாரும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஐந்து குழந்தைகள் உள்பட 18 பேர் பதுல்லா மற்றும் தியதலாவா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், எலாவில் இருந்து டங்கல்லேவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியதாகவும் போலீஸார் கூறினர்.