
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மிட்டாய் கடை நடத்தும் பெட்டிக்கடைக் காரருககு வருமான வரித்துறையினர் 141 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று அனுப்பிய நோட்டீஸ் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலியின் நயாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுதிர் குப்தா. இவர் வீட்டில் ஒரு சிறிய மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது கடையில் 141,28,47,126 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் குப்தா குடும்பம் அதிர்ச்சியடைந்தது. சாதாரண மிட்டாய் கடை நடத்தி வரும் தனக்கு இவ்வளவு பெரிய தொகையில் வருமான வரித்துறை நோட்டீஸ் வந்துள்ளதே என்ற அதிர்ச்சியில் சுதிர் குப்தா மன அழுததம் அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து சுதிர் குப்தா கூறுகையில், இது கற்பனை செய்ய முடியாத தொகை. நான் சிறு பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். நான் ஒரு போதும் கோடிக்கணக்கான ரூபாயில் வியாபாரம் செய்ததில்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு நோட்டீஸ் வந்துள்ளதால் எனது குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று கூறினார்.
டெல்லியைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சுதிர் குப்தாவின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை தவறாகப் பயன்படுத்தி பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ததன் மூலம், நிறுவனங்கள் பெரிய அளவிலான வணிக பரிவர்த்தனைகளைக் காட்டி, வரி ஏய்ப்புக்கான பொறுப்பை அவர் மீது மாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து சுதிர் குப்தா கூறுகையில், “டெல்லியில் 6 நிறுவனங்களை நிறுவ எனது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டும் எனக்கு இது போல் ஒரு நோட்டீஸ் வந்தது. அப்போது அந்த நிறுவனங்களுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வருமானவரி அதிகாரிகளிடம் விளக்கினேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது” என்றார். சாதாரண மிட்டாய் கடை நடத்துபவருக்கு 141 கோடி ரூபாய் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் பின்னணியில் நடந்த குற்றத்தை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.