
காட்டாங்குளத்தூர் திமுக இளைஞணி செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 140 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ். இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். தொழிலதிபரான இவர் பேருந்துகள், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். ரத்தீஸ் குடும்பத்துடனும், அவரது தாய் யமுனாபாய் தனியாகவும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டை பூட்டி விட்டு மகன் ரத்தீஸ் வீட்டிற்கு யமுனாபாய் வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டிற்கு யமுனாபாய் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் பீரோவை உடைத்து அதில் உள்ளே இருந்த 140 பவுன் நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதனைக் கண்டு யமுனாபாய் அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை குறித்து உடனடியாக மறைமலை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், யமுனாபாயிடம் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
யமுனாபாய் அவரது மகன் வீட்டிற்குச் செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அதன்பின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளர் வீட்டில் 140 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.