
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் வீடுகள் இடிந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக பர்வான், காபூல், கபிசா, மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகள் இடிந்து விழுந்ததில், இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 115-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அரசு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது. சர்வதேச நாடுகளிடமிருந்தும் உதவி கோரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 16 மற்றும் 13-ம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.