
பிஹாரில் நடைபெறும் சட்டமன்ற தேரதலை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து அதிக அளவு மதுபானம் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற மதுபானம் பெரிய ஆயுதமாக உள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக பிஹாரில் மதுபானம் வாங்கி பதுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து பிஹாருக்கு மதுபானக் சரக்குகள் அனுப்பப்படுகின்றன. இதில் உத்தரப்பிரதேசம் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது.
இந்த முறை தேர்தல் சீசனுக்காக மது கடத்தல் மன்னர்கள் சந்தௌலி, வாரணாசி, பல்லியா, காஜிப்பூர், தியோரியா, சோன்பத்ரா, குஷிநகர் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் எல்லை மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் மதுபானங்களுக்கு ரகசியமாக பிஹாருக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். காவல் துறை சோதனை இருந்தாலும், கடத்தல்காரர்கள் மது கடத்தலுக்கு புதிய முறைகளை கையாளுகின்றனர். சமீபத்தில், சந்தௌலி போலீஸார், ஒரு லாரியை சோதனை செய்தபோது, வெள்ளை சிமென்ட் சாக்குகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 720 பெட்டி வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர், அதன் மதிப்பு ரூ.1.12 கோடி. இந்த சரக்கு பஞ்சாபிலிருந்து பிஹாருக்கு கடத்தப்பட்டு தெரிய வந்தது, இந்த சரக்குகள் தேர்தல் நேரத்தில் விநியோகிக்கப்பட இருந்தது.
மது கடத்தல்காரர்களின் வலையமைப்பு உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பரவியுள்ளது. அவர்கள் பெரும்பாலும் ரயில்பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நதிகளை கடத்தலுக்கு பயன்படுத்தகின்றனர். இது போக்குவரத்தை எளிதாக்குகிறது. சமீபத்திய மாதங்களில், கோபகஞ்ச் காவல்துறை மற்றும் எஸ்ஓஜி குழு மௌவில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்தன. அதே நேரத்தில், ஹரியாணாவிலிருந்து பிரதாப்கர்-மதுரா வழியாக பிஹாருக்கு சட்டவிரோத மதுபானங்களும் அனுப்பப்பட்டன, அதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டன.
உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாரின் எல்லைகள் சுமார் 1,060 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. இதனால் கண்காணிப்பு ஒரு பெரிய சவாலாக உள்ளது. தேர்தல் காலத்தில் மதுவிலக்குப் பிரிவு அதன் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டியதற்கு இதுவே காரணமாக உள்ளது. ஆனால், இன்னும் அதிக அளவு மது பிஹாருக்கு வந்து கொண்டிருக்கிறது. 2025 ஜனவரி முதல் மே வரை, பிஹாரில் 64 மதுபானக் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 25 சதவீதம் உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானமாகும். வரவிருக்கும் தேர்தலையொட்டி பிஹாரின் 23 எல்லை மாவட்டங்களில் 390-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள், சிசிடிவி, கையடக்க ஸ்கேனர்கள் மூலம் கண்காணிப்பு கடுமையாக்கப்பட உள்ளது.
பிஹார் தேர்தலில் மதுவுக்கும் வாக்குக்கும் இடையிலான உறவை மாநில அரசு எந்த வகையில் துண்டிக்கப்போகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் கூர்மையாக கண்காணித்து வருகின்றனர்.