
சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ் குமார் மரணம் முன்பகையில் நடக்கவில்லை என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ் குமார். இவர் சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சதீஷ் நேற்று இரவு கடையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கும், அருகில் இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாக்கப்பட்ட சதீஷ்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வாரச்சந்தை ரோட்டில் டூவீலர் ஒர்க்சாப் நடத்தி வந்தார். அவரது கடையில் மணிபாரதி என்ற நபரும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஓய்வு எடுப்பதற்காக வாரச்சந்தை அருகே தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். அவர்களது அறை அருகே ட்ரம் செட் தொழில் செய்யும் ஆறு நபர்கள் தங்கி உள்ளனர்.
நேற்று இரவு இரு தனிப்பட்ட நபர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அதில் சதீஷ்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த சதீஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த சதீஷ்குமாருக்கு வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தில் எந்த ஒரு ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தில் எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, மதம் மற்றும் சாதி ரீதியான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவமானது தனிப்பட்ட நபர்களிடையே நடைபெற்ற வாய்த்தகராறால் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் எந்தவித முன்விரோதமோ, முன்பகையோ எதுவும் இல்லை என தெரியவருகிறது. இது தொடர்பாக சந்தேக நபர்களை காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றச்சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் எவரும் ஈடுபடவில்லை எனவும் தெரிய வருகிறது. விசாரணை முடிவிலும் பிரேத பரிசோதனையின் முடிவிலும் இறந்தவரின் இறப்பு குறித்த உண்மை வெளிவரும்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை உட்கோட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து முழுமையான தகவல் அளிக்கும்வரை இது தொடர்பான தகவல்கள் எதுவும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.