
சிவகங்கையில் பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் சதீஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ். இவர் கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அத்துடன் சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே வாகன பழுது நீக்கம் கடையையும் நடத்தி வந்தார். இந்நிலையில் சதீஷ் நேற்று இரவு கடையில் இருந்துள்ளார். அப்போது அவரது கடைக்கு ஐந்துக்கு மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்கள் சதீஷீடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் சதீஷை சரமாரியாக தாக்கியதில் அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் அவர் மூர்ச்சையாகியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சதீஷின் கடைக்கு விரைந்து வந்த போலீஸார், ரத்தக்காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பாக சதீஷின் நண்பர்கள் ஐந்து பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர்கள் சதீஷை கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகர வர்த்தக பிரிவு தலைவர் சதீஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில செயலாளர் வினோத் பி.செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சிவகங்கை நகர பாஜக வர்த்தக அணி தலைவர் சதீஷ் மீது மர்ம கும்பல் மிக கடுமையாக தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ள நிகழ்வை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். திமுக அரசின் நிர்வாக தோல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதே சிவகங்கையில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட பிறகும் கூட, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் விளைவுகளை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.