
மேற்கு வங்காளத்தில் 19 வயது கல்லூரி மாணவியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணநகரைச் சேர்ந்தவர் இஷிதா மாலிக்(19). விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த இஷிதா மாலிக் மருத்துவம் படிக்க விரும்பியதால் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு நீட் தேர்விற்கு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் புகுந்த வாலிபர், இஷிதா மாலிக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் இஷிதா மாலிக் சரிந்து விழுந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இஷிதா மாலிக்கை சக்திநகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது இஷிதாவை சுட்டுக்கொலை செய்தவர் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள காஞ்ச்ரபராவைச் சேர்ந்த தேப்ராஜ் சிங்(21) என்பது தெரிய வந்தது. இஷிதாவுடன் கல்லூரியில் படிக்கும் போது இவர் பழகியுள்ளார். இதனால் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவப் படிப்பதற்காக காதலை முறித்துக் கொண்டதால் இஷிதா மாலிக்கை தேப்ராஜ் சிங் சுட்டுக்கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணநகர் காவல் கண்காணிப்பாளர் அமர்நாத் கூறுகையில், .” இஷிதா மாலிக்கின் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தேப்ராஜ் சிங் தலைமறைவாக உள்ளார். அவரை விரைவில் கைது செய்வோம் என்றார். சர்க்யூட் ஹவுஸ் மற்றும் மாவட்ட நீதிபதியின் குடியிருப்பு போன்ற உயர் பாதுகாப்பில் நிறுவனங்கள் அருகில் உள்ள இடத்தில் மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.