
பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவிகளை நீக்கும் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் ஆக.20-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த மசோதா தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அரசியலமைப்புச்சட்ட 130-வது திருத்த மசோதா, தீவிர குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், 30 நாட்களுக்குள் பிணை பெறாவிட்டால் அவர்களது பதவியிலிருந்து தன்னிச்சையாக விடுவிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து அனைத்து அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா அல்லது எந்தவொரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பது சரியான ஜனநாயக நடைமுறை அல்ல.
இந்த மசோதா எந்த எதிர்க்கட்சிக்கும் எதிரானதல்ல. முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களையும் சட்ட வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று மக்களிடையே எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மசோதாவின்படி 30 நாட்களுக்குள் பிணை பெறுவோர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. பிணை வழங்கும் உரிமை உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. பிணை வழங்கப்படாத நிலையில், அவரது பதவியிலிருந்து விலக நேரிடும். இந்த சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறும். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் அறத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.