
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
இதை பார்த்து, கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத திமுக அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார். இதற்கு பல்வேறு கட்சியினர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் காவல்துறை தலைவரிடமும் புகார் அளித்தது.
இந்த நிலையில், அதிமுக, பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்று இரவு 7 மணியளவில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அந்த வாகனத்தை வழி மறித்ததுடன், ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால், ஆம்புலன்சை கொண்டு செல்வதாக, ஓட்டுநர் தெரிவித்தார். உடனே, போலீஸார் தலையிட்டு அதிமுக வினரை விலக்கி விட்டு, வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கினால் 10 ஆண்டு சிறை என்று எடுத்த தமிழக அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸில் ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையையும் நீதிமன்றத்தில் செலுத்த நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.