
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை ஆக.29-ம் தேதி தொடங்குகிறார்.
ஜப்பானில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை ஆக.29-ம் தேதி தொடங்குகிறார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கிறார்கள். பிரதமராக மோடி எட்டாவது முறையாக ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கிருந்து பயணத்தை முடிந்துக் கொண்டு ஆக. 31-ம் தேதி சீனாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு தியான்ஜின் நகரில் ஆக.31 மற்றும் செப். 1-ம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி ஜப்பான் பயணத்துக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் தியான்ஜினில் நடைபெறும். ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பயணம் செய்வார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்க உள்ள ரஷ்ய அதிபர் புதின் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பயணம் செய்திருந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு மோடி செல்ல உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லையில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் இரு நாடுகளின் உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-சீனா தங்களது வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.