
41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 1983 டிசம்பர் 17-ம் தேதி பஷீர் ஷா என்பவரும், அவரது நண்பர் மகேந்திராவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் என்ற பப்பன், நரேந்திர குமாரும் அவர்களை வழிமறித்துள்ளனர். ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பை பஷீர் ஷா கைவிட வேண்டும் என்று நரேந்திர குமார் கூறியுள்ளார். அப்படி எந்த உறவும் அந்த பெண்ணிடம் இல்லை என்று பஷீர் கூறியுள்ளார். அப்போது விஜய் தூண்டுதலால் பஷீரை நரேந்திரன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பஷீர் ஷா மரணமடைந்தார்.
இக்கொலை தொடர்பான வழக்கில் நரேந்திர குமார், விஜய் ஆகிய இருவரையும் குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 1984-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இருவரும் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் இருந்த போது நரேந்திர குமார் இறந்தார். இதனால் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. விஜய் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 41 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விஜய்யை அலகாபாத் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. விஜய்க்காக உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் லோச்சன் சுக்லா, மரணக்காயங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு நரேந்திரகுமாருக்கு மட்டுமே இருந்தது. மனுதாரரின் பங்கு தூண்டுல் மட்டுமே. கொலை செய்வதற்கான திட்டமிடப்பட்ட திட்டத்தையோ அல்லது பொதுவான நோக்கத்தையோ அரசு தரப்பு நிறுவத் தவறிட்டதாக அவர் வாதிட்டார்.
விஜய் என்ற பப்பனின் குற்றவியல் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி சௌமித்ரா தயாள் சிங் மற்றும் நீதிபதி மதன் பால் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அக்டோபர் 20, 1984 அன்று ஜான்சியின் கூடுதல் அமர்வு நீதிபதியின் தீர்ப்பையும் உத்தரவையும் ரத்து செய்தது. அத்துடன், மனுதாரரின் பங்கு ஒரு சாதாரண தூண்டுதலாக இருந்தது, இது ஒரு பலவீனமான ஆதாரம் என்றும், இதன் அடிப்படையில், இவ்வளவு கொடூரமான குற்றத்திற்காக அவரை குற்றவாளியாகக் கருத முடியாது என்றும் கூறியது. அத்துடன் சம்பவ இடத்தில் இருப்பதும் தூண்டுவதும் மட்டுமே கொலை செய்வதற்கான பொதுவான நோக்கத்தை நிரூபிக்காது என்று கூறிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விஜய்யை விடுவித்தது. அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது.