
ஆப்கானிஸ்தானில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லைக்கட்டுப்பாடு மற்றும் குடியேற்றத் தடை காரணமாக கடந்த சில மாதங்களாக ஈரானில் இருந்து ஆப்கானிய குடியேறிகள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அப்படி ஈரானில் இருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட ஆப்கானிய குடியேறிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, தலைநகர் காபூலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாண நெடுஞ்சாலையில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மற்றும் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் போலீஸார் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனால், பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண அரசாங்க செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி தெரிவித்தார்.பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இஸ்லாம் காலாவில் வாகனத்தில் ஏறிய புலம் பெயர்ந்தோர் என்றும் கூறியுள்ளார். பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.