
திண்டுக்கல்லில் மாவட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உள்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பாபநாசம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக அந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டது. ராமலிங்கம் அவர் வசித்த பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்றே இரவு அவர் கொலை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குறிச்சிமலையைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த. நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகர் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டிலும், ஒட்டன்சத்திரம் யூசுப் என்பவர் வீட்டிலும், வத்தலக்குண்டு பகுதியில் உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திண்டுக்கல்லில் கொடைக்கானல் பகுதியிலும், தென்காசி மாவட்டத்திலும் என்ஐஏ ரெய்டு மேற்கொண்டு வருகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.