
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தற்போதைய மகாராஷ்டிராவின் ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், ஆக.20-ல் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கல் செய்ய ஆக.21 கடைசி நாளாகும்.
இந்த நிலையில், இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்கள் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு வேட்பாளருக்கு ஒப்புக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி. இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாதனை” என்றார்.
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி, 1946-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஆந்திரா மாநிலத்தில், அதாவது இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பிறந்தவராவார். கோவா மாநிலத்தின் முதல் லோக் ஆயுக்தா தலைவராகவும், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்த சுதர்சன் ரெட்டி, இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது கிடையாது. முதல் முறையாக தற்போது தான் போட்டியிடுகிறார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து சுதர்சன் ரெட்டி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி உட்பட அனைத்து கட்சிகளும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.