
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 59 எம்.பிக்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிகளின் நாடாளுமன்றக்குழுத்தலைவர்கள் கூட்டம் இன்று காலை 10.15 மணியளவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அரசியலுடன் தொடர்பில்லாத பொது வேட்பாளர் களறிமறக்கப்படுவார் என்று இந்தியா கூடடணி கட்சிகள் ஏற்கெனவே தெரிவித்தது. அதன்படி பொது வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெல்லும் வாய்ப்பு உள்ளது.