
திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டத்தால் நேற்று ஒரே நாளில் 3.53 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது.
இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான கோயில் திகழ்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், விடுமுறை தினங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால், திருப்பதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இலவச தரிசனத்தில் சுமார் 4 கி.மீ வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 77,043 பக்தர்கள் வருகை தந்தனர். இதில் 41,859 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் உண்டியல் காணிக்கை மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.3.53 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.